Skip to main content

குக்கூ குழந்தைகள் வெளி - சிறு அறிமுகம்

குக்கூ குழந்தைகள் வெளி - சிறு அறிமுகம்

குக்கூ

இந்த சொல் ஒரு மாலைப்பொழுதை குறிக்கின்றது
ஒரு தீராத தேடலை
ஒரு மலைமுகடையும்

குக்கூ குழந்தைகள் வெளி

இது குழந்தைகள் தங்களை தங்களின் இருப்பை வெளிப்படுத்த உதவும் சிறு முயற்சியே.

இறுக்கமான வகுப்பறைக்குள் இருக்கும் மாணவர்களை மீண்டும் குழந்தைகள் ஆக்கி சுதந்திரமாகவும் உயிர்ப்போடும் வாழ்வை அனுகச்செய்வதேயன்றி இந்த வெளி வேறில்லை.

குக்கூ குழந்தைகள் வெளி இயற்கை குறித்தும் நம் ஆகச்சிறந்த அடிப்படைகள் குறித்தும் குழந்தைகளிடம் பேசுகிறது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு விதைகளை சேகரிக்க காடுகளுக்கும் மலைச்சரிவுகளுக்கும் நீர்நிலைகளுக்கும் செல்கிறது. சேகரித்த விதைகளை குழந்தைகள் தத்தம் வீட்டில் தினமும் நீரூற்றி வளர்க்க ஊக்கப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு நாட்டுப்புற நடனங்களும், நடிப்பையும், ஓவியம் , சிற்பக்கலை போன்ற நுண்கலைகளும் பயிற்றுவிக்கிறது.

குழந்தைகளின் எண்ணங்களின் விரிவை நோக்கும் தேர்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான திரைப்படங்களும் திரையிடப்படுகின்றது.

இந்த வெளியில் யாவரும் பயணிக்கலாம்.  
நேரடியாக களப்பணியாற்றலாம்.

குக்கூ குழந்தைகள் வெளி ஒரு நிறுவனம் அல்ல. அதில் அடுக்குகள் இல்லை.ஏணிகள் இல்லை. அது ஒரு வெளி. எந்த சுவர்களும் இல்லாத ஒரு வெளி. கதவுகளை தேடி அலைய வேண்டியதில்லை. எந்த திசையிலிருந்தும் நுழையலாம்.

குக்கூ குழந்தைகள் வெளி பணம் சேமித்து செலவழிக்கும் தன்மை கொண்டதல்ல. தேவை எழும் பொழுது பணத்தை பெற்று செலவழித்து மீண்டும் ஏதுமற்றிருப்பதே அதன் இயல்பு.


நம் அனுபவங்கள்

நாம் எல்லோருமே உண்மையில் ஒரு கைத்தட்டலை எதிர்நோக்கியே ஒவ்வொரு பகலையும் இரவையும் நகர்த்துகிறோம். உண்மையான கைதட்டலின் ஆனந்தத்தை குக்கூ குழந்தைகள் வெளி நமக்கு சாத்தியப்படுத்துகிறது.

அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகளின் கைதட்டல்.

நம்மை பற்றி துளியும் அறிந்திருந்தாத , சகமனிதனின் இருப்பை அங்கீகரிப்பதற்காக மட்டுமே எழுப்பப்படும் கைதட்டல். அது அபூர்வமானது. அழகானது. உண்மையானது.

நம்மை நமக்கு அறிமுகப்படுவது. நாம் வாழ்வதற்கான ஆதாரத்தை நிலை நாட்டுவது. நம்மை தூய்மை படுத்துவது. நம்மை மனித உன்னதம் நோக்கி பயணிக்க உந்துவது.

இயன்ற வரை நேரத்தை ஏற்படுத்திக்கொண்டு பங்குகொள்ளுங்கள். அந்த பயணம் அதன் அனுபவம் உங்களை என்றென்றைக்குமான மாற்றத்திற்கு இட்டுச்செல்லலாம்

Comments

Popular posts from this blog

Cuckoo Forest School

We are building Cuckoo

Nothing Goes to waste in Nature or Art