குக்கூ காட்டு பள்ளி




இனியவர்களே....
நாம் நம் நீண்ட கால செயலினூடாக சென்று சேர இருக்கின்ற நிலம் செம்மண்ணோடு ஜவ்வாது மலை அடிவாரத்தில் தாவரங்கள் முளைத்து பூமி மீது படர்ந்திருக்கிறது.
சமூகத்திற்கு வெளியேயும், கானகத்திற்கு உள்ளேயும் இயற்கையை கவனிக்கவும், மனித மாண்பையும், சமூகத்தை கற்கவும் பிறர் மனம் நோகா அறநெறியோடும், கலாச்சாரப் பண்பாட்டு மன அழுத்தங்களிலிருந்து விடைபெற்று, நிபந்தையற்ற அன்பு, எல்லையற்ற காருண்யம், இணைக்கப்பட்ட ஆன்மாக்களின் பன்நிற பயணம். தன்னிலையில் உயிர்த்திருக்கும் இயல்பூக்க கற்றலின் கொட்டகையொன்றை நாம் அனைவரின் கரம் கொண்டு நெய்ய உள்ளோம். கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் அந்நிலம் இருக்கும்...

அங்கே குழந்தைகள் களங்கமற்ற குதூகலத்தையும், முதியவர்கள் தங்கள் வாழ்வனுபவ ஞானத்தின் எல்லையின்மைகளை விரல் கோர்த்துக்கொள்ளலாம்...
இயற்கைக்கு விரோதமற்ற நிஜமான மனித தேவைகளுக்கான, மரபான தொழில்நுட்பங்கள், இயற்கை வழி நிரந்தர வேளாண்மை, காலத்திலிருந்து விடுபட்டு பன்முக பருவங்களின் வியாபித்தல்களை உணர்தல், இயற்கையை, சமூகத்தை, வாழ்வை கவனித்து கற்றல் மூலம் யாவர் காலடியில் இருந்தும் விழிப்புணர்வின் பாதை தோன்றும். சொல், எழுத்து, பொருள், தொழில் முழுமை ஆக்கம் இவை யாவும் கற்று இயற்கையில் தெளிதல் அதற்கான சிறு தொட்டில்தான் அந் நிலம்...
அங்கிருந்துதான் தொடங்குகிறது நம் பயணமும், வனமும், காட்டாறும்...

இன்னும் பிறக்காத சந்ததியும், குழந்தைகளும் காணும் தங்களுக்கான கனவே...நம்மை உள்ளிருந்து செயல்பட தூண்டுகின்றன.
கர்ப்பமுற்ற பன்றி தான் ஈனப்போகும் குட்டிகளுக்காக முள்ளாலும் வேர்களாலும் கற்களாலும் குட்டிகளுக்கு மெத்தையை பின்னுவது போலதான் நாம் நம் ஒருமித்த ஆன்மாவில் இணைகிறோம். குக்கூ காட்டுப்பள்ளியின் கற்றல் சூழமையில், ஒரு மின்னல் வெட்டில் காளானாக பூக்கலாம், அறிவின் விடுபடலில் வண்ணத்துப் பூச்சியாக பறக்கலாம். ஒரு கேள்விக்கு பதிலாக அல்லாமல் மலராக யாவரும் நம் ஒற்றை ஆன்மாவில் மலரலாம்...
குக்கூ குழந்தைகள் வெளி...
25/ Mandhoppu, Pa Vu Sha Nagar,
Polour Road, Tiruvannamalai - 606 601
Tamilnadu, India.
cuckoochildren@gmail.com
facebook.com/cuckoochildren
9443105633 - 9965689020 - 9442593448 - 9942118080 

Comments

Post a Comment

Popular posts from this blog

Cuckoo Forest School

We are building Cuckoo

Nothing Goes to waste in Nature or Art