குக்கூவுடன் ஒருநாள்
தனக்கு தெரிந்ததையோ அல்லது கற்றுக்கொண்டதையோ மற்றவர்களுக்கு பயனளிக்கும் பொழுதோ அல்ல மற்றவர்களுக்கு பிரதிபலன் பாராமல் கற்று கொடுத்து அதனால் அவர்கள் மகிழ்ச்சியடையும் பொழுதுதான் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாற்றம் அடையும் அடைகிறது. அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு மிகச்சிறிய விஷயமாக இருந்தாலும் சரி.
எல்லோருக்கும் வாழ்க்கையில் பல கட்டங்களில் நிதர்சனத்தை தன் அனுபவத்தின் மூலமாக தரிசிக்கும் வாய்ப்பினை கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் அமைத்து கொடுக்கும். வாய்ப்பினை பயன்படுத்தி கொள்பவர்கள் தன் சுயத்தை மேம்படுத்தி கொண்டும் சூழலையும் மேம்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். ஊத்துகுளியில் உள்ள குக்கூ குழந்தைகள் நூலகம் எதை எதையோ நினைத்துகொண்டு திரிந்த எனக்கு வாழ்வின் அர்த்தத்தை கற்றுகொடுத்துள்ளது.
விவசாயிகளின் நண்பன் மண்புழு என்பதுபோல மண்புழு என்ற சிற்றிதல் மூலம் எனக்கு நல்ல மனங்கொண்ட பல உறவுகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. திருவண்ணாமலையில் நடைபெற்ற நெல் திருவிழாவில் கலந்து கொண்டதிலிருந்து (நம்மாழ்வார் அய்யாவின் உரை உட்பட) என் வாழ்க்கையிலும் வாழும் முறைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
செந்தில் அண்ணாவின் குடும்பத்துடன் அவரது காரில் பெங்களூரில் இருந்து ஊத்துகுளியில் நடக்கும் சிறுவர்முகாமிற்கு பயணம் தொடங்கிவிட்டது என்பதை பூரிப்புடன் சொல்லும் விதமாக இருந்தது பல நாட்கள் கழித்து அன்று பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழை.
செந்தில் அண்ணா மற்றும் அவரது குடும்பத்தாரை பார்க்கும் வரையிலும் குழந்தையை எப்படி குழந்தையாகவும், மனிதம் நிறைந்தவர்களாகவும், சுதந்திரத்துடன் கூடிய பாதுகாப்பாகவும் வளர்க்க முடியும் என்று எந்த பெற்றோரிடமும் பார்த்ததில்லை. அவரது மகள் நிலா, பெயரைபோன்றே அழகானவள். அவளை பற்றி தனியாகவே எழுத வேண்டும். ஏனென்றால் அவளிடமிருந்து அத்தனை அழகியவைகளை நான் கற்றுள்ளேன்.
இரவு சரியாக பனிரண்டு மணியளவிற்கு ஊத்துகுளியில் உள்ள அழகேஸ்வரி அக்கா வீட்டில் செந்தில் அண்ணாவின் மனைவி ரம்யா அக்காவையும் நிலாவையும் விட்டுவிட்டு நானும் செந்தில் அண்ணாவும் குக்கூ நூலகத்திற்கு சென்றுவிட்டோம்.
ஊத்துகுளி மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள கிராமபுற பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் சுற்றுசூழல், சமுதாயம் மற்றும் கல்வி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி நடைமுறையில் சாத்தியபடுத்தி கொண்டிருப்பவர் அழகேஸ்வரி அக்கா. இயல்வாகை பாரம்பரிய விதைநாற்று பண்ணை மூலம் குழந்தைகளை கொண்டே விதைகளை சேகரித்து அருகில் உள்ள கயித்தமலை மற்றும் அதன் சுற்றுபகுதியை சுற்றியும் குழந்தைகளாலே மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.நூலகத்திற்கு வரும் குழந்தைகள் அழகேஸ்வரி அக்காவை அம்மா என்றே அழைக்கிறார்கள் அத்தனை அன்பு அவர்களிடத்தில்.
ஒரு திருவிழா போல நூலகத்தினை ஒரு கூட்டம் குழந்தைகள் வரைந்த ஓவியங்களை கொண்டு அலங்கரித்து கொண்டிருண்டிருந்தது. மீண்டும் புதிய நண்பர்கள். ஒருவரையொருவர் அறிமுகபடுத்தி கொண்டு அலங்கார வேலையில் குதித்துவிட்டோம். சிவராஜ் மற்றும் முத்து அண்ணன்கள், குழந்தைகளின் ஓவியத்தை பார்த்து சிலாகித்து கொண்டிருந்தனர். ஒரே எண்ணங்களை கொண்டவர்கள் ஒன்றாக கூடி இருக்கும் பொழுது இருக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும் எழுத்துகளாலும் வடிவபடுத்தவே முடியாது. அது அனுபவபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே முடியும்.
நூலகத்திற்கு செல்லும் பாதையே ஒரு கவிதை போன்றது.பூக்களின் ஆரவாரம் |
முதலில் கயித்தமலை முருகன் கோவிலை குறிக்கும் வளைவு, சிறிது தூரம் நடந்தவுடன் பெரிய உயரமான ஆலமரம், அதன்பின்னால் பல வருட அனுபவத்தை கொண்டிருக்கும் வயதானவரைபோல ஒரு பழைய சிறு மண்டபம்., பின் அதனை தொடர்ந்து இடுகாடு, இடுகாட்டிற்கு எதிர்புறம் பலநூற்றாண்டுகளை கடந்து தன் அடியாளத்தை இழந்து கொண்டிருக்கும் கலைநயத்துடன் கூடிய கிணறு. இவை இரண்டிருக்கும் இடையில் மலைக்கு செல்லும் நீண்ட பாதை, மீண்டும் ஒரு ஆலமரம் அதற்கு பின்னால் நான்கு பக்கமும் திண்ணைகள் கொண்ட பிள்ளையார் கோவில். பிள்ளையார் கோவிலுக்கு வலதுபுறம் இயல்வாகை நாற்றுபண்ணை, கோவிலுக்கு பின்புறம் குக்கூநூலகம்.
இரவு பனிரண்டு மணியளவில் நிலவின் வெளிச்சத்தில் நிசப்தத்தின் பாதையில் பிடித்தவர்களுடனோ தனிமையிலோ நடக்கும் பொழுது வாழ்க்கையில் வேறு எதுவும் வேண்டாமென்றே தோன்றும்.இது போல் ஒரு நாள் இரவு நானும் சிவராஜ் அண்ணாவும் நடக்கும் பொழுது இடுகாட்டில் உள்ள மரத்தின் மேல் ஆண் மயில் உறங்கும் காட்சியை நிலவொளியில் கண்டபொழுது இரண்டு பேரும் அப்படியே சில மணிதுளிகள் பேசாமல் நின்றுவிட்டோம். காணக்கிடைக்காத கடவுளுக்கு கூட கிடைக்காத காட்சி அது.
எல்லா வேலைகளும் ஒரு வழியாக முடிவுறும் தருவாயில் ஒவ்வொருவராக உறங்க சென்றுவிட்டனர். முத்து, இசை, அஸ்வனி, பாலா இவர்களுடன் நானும் ஐந்து நிமிடம் மட்டும் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து பேசிவிட்டு தூங்கிவிடலாம் என்று தீர்மானித்துவிட்டு, பிள்ளையார்கோவிலின் திண்ணையில் உட்கார்ந்து விவாதிக்க ஆரம்பித்தோம். என்னவெல்லாம் செய்ய கூடாது, உதவி செய்கிறோம் என்ற பெயரில் நம்மையறியாமலேயே மற்றவர்களை எப்படி ஏமாற்றி கொண்டிருக்கிறோம், பிச்சை எடுப்பவர்கள், அரசியல், பாலியல் தொழில் புரிபவர்கள் மற்றும் சாதியம் சார்ந்த பிரச்சனைகள் என பலவற்றை பற்றி கலந்துரையாடினோம். ஆனால் இறுதிவரைக்கும் ஐந்து நிமிட தலைப்பை மட்டும் தேர்ந்தெடுக்கவே இல்லை. சுமார் ஒரு மூனரை மணியளவில் திண்ணையின் மறுபக்கம் நான் உறங்க செல்ல மற்றவர்கள் தொடர்ந்தார்கள்.
கதைகளுக்குள்ளே கதாபாத்திரமாய் |
வெகுகாலம் ஆகிவிட்டது திண்ணையில் படுத்துறங்கி. ஒன்றாவதோ இரண்டாவதோ படிக்கும் பொழுது எனது சொந்த ஊரில் வெப்பகாலங்களில் மின்சாரம் இல்லையென்றால் வீட்டின் வெளியே வலது புறத்தில் உள்ள பெரிய திண்ணையில் நானும் இடது புறம் உள்ள சின்ன திண்ணையில் எனது தம்பியும் உறங்குவோம். வீட்டின் வாசலுக்கு எதிர்புறம் இருக்கும் நடைபாதையிடத்தில் என் அப்பா, சித்தப்பா, தாத்தா எல்லோரும் ஆலுக்கொரு கயித்து கட்டலில் உறங்குவார்கள். அந்த தெருவில் உள்ள அனைவருமே அப்படித்தான் உறங்குவார்கள். பங்காளிகள் சண்டை என்றாலும் உறங்கும் பொழுது அன்றைய நிகழச்சிகளை வைத்து ஒருவரையொருவர் கேலி பேசிகொண்டே நிலவொளியில் உறங்கிய உறக்கங்கள் அன்று வந்துபோனது.
மறுநாள் நானும் சிவராஜ் அண்ணாவும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருத்துவிட்டோம். ஆனால் இரவு நான் விவாதித்த குழுவில் இருந்த யாரும் இல்லை எல்லோரும் நாட்டு மாடினை பார்க்க சென்றுவிட்டனர். நவீன், அசோக், குமார், சிவராஜ் மற்றும் செந்தில் அண்ணவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது பசங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. சில பேர் குழுவாகவும் மற்ற சிலபேர் அவர்களது பெற்றோர்களுடனும் கூடவே மதிய உணவினையும் எடுத்து வந்தனர்.
காலை ஆறு மணிக்கெல்லாம் அதிலும் அவர்களது ஊரில் இருந்து நடந்து வருகிறார்கள் என்றால் எத்தனை மணிக்கு அவர்கள் விழித்திருப்பார்கள்? சிலருக்கு மதிய உணவினை தயார் செய்ய அவர்களது பெற்றோர்கள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள்? சாதரணமாக பள்ளிக்கு செல்ல கூட அவ்வளவு ஆர்வம் இருக்காது குழந்தைகளிடம். விடியர் காலையில் அவர்களது முகத்தில் அத்தனை ஆனந்தம். பிரபு மற்றும் அவனது தம்பி கோடைமுகாம் ஆரம்பித்த நாளில் இருந்து குக்கூ நூலகத்திலேயே தங்கிவிட்டனர் அவர்களது பெற்றோரும் சம்மதித்துவிட்டனர், அதுமட்டுமில்லை பிரபுவின் பெற்றோர் முடிந்த அளவிற்கு மதிய உணவினையும் தயார்செய்து கொண்டுவந்து தருகின்றனர் உணவுகொண்டுவராத குழந்தைகளுக்கும் சேர்த்து.
உணவு பற்றாகுறை ஏற்படின் அருகில் உள்ள கயித்தமலை முருகன் கோவில் தினமும் நடைபெறும் மதிய அன்னதான கூடத்திற்கு சென்று சோறு திண்ணுகின்றனர். பெரியவர்கள் பரிமாற குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் அங்கு பசியாறுகின்றனர். அங்கு பணிபுரியும் அம்மாவின் உதவியால் இது எல்லாம் சாத்தியமாகிகொண்டிருக்கிறது. அந்த அம்மா உணவு பரிமாறும்போது பேசுவதையும் பேசும்போது முக பாவனையும் பார்க்கும்போது கண்டிப்பானவராக இருப்பாரோ என்று தோன்றும், ஆனால் அவ்வளவு அன்பு, கனிவு அவர்களிடத்தில். உணவு மிக அருமையாகவும் அவ்வளவு நேர்த்தியாகவும் அன்னதானத்தில் திண்கிறோம் என்ற உணர்வே இருக்காது. இரண்டு மூன்று முறை குக்கூவிற்கு சென்றபோது அன்னதானத்தில்தான் பசியாறியுள்ளேன். அங்கு பரிமாறப்படும் ரசம் (ஈடு இணையில்லா ரசம்) அனைவருக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் அதுவும் குறிப்பாக முத்து மற்றும் சிவராஜ் அண்ணகளுக்கு.
பகுத்துண்ணுதல் |
நூலகத்திற்கு வந்தவுடன் சும்மா இல்லை. கோலி குண்டினை எடுத்து அதை கொண்டு விளையாடப்படும் “பச்சா” என்ற விளையாட்டை ஆரம்பித்து அதில் மும்மரமாகிவிட்டனர். சிறிது நேரம் பொறுமையுடன் இருந்த நாங்கள், “நாங்களும் விளையாட்டிற்கு வருகிறோம்” என்று சொன்னவுடன் “வாங்கண்ணா” என்று மரியாதையுடன்… ”டே கதிரே, அண்ணனுக்கு கோலி குண்டு கொடுடா” என்று கார்த்தி சொல்ல, ஆரம்பித்தோம் விளையாட்டினை. பச்சா விளையாட்டு சரியாக பதினெட்டு வருடம் கழித்து அன்றுதான் மீண்டும் விளையாடினேன் அதுவும் பெரிய கோலி குண்டில்.
முதலில் வயதில் பெரியவர்கள் பின் சிறியவர்கள் என்று அவர்களே வரிசையினை உருவாக்கினர். என்னால் குறிபார்த்து ஒரு முறைகூட சரியாக அடிக்கவில்லை. ஒரு முறை அவர்கள் பார்க்கவில்லை என்று நினைத்து
அடிச்சிடேன் என்று சொல்ல…
“நீ கிழிச்ச”...
என்று ஒருவனிடம் இருந்து பதில் வந்தது. என்னடா இவ்வளவு பெருந்தன்மையாக இருக்கிறார்களே என்று அப்போதுதான் தெரிந்தது. விளையாட்டு நுணுக்கம் தெரிந்தவர்கள் பின்னாலும் ஒன்னும் தெரியாத சின்ன பசங்களான எங்களை அவர்கள் முதலிலும் வரிசைபடுத்தியுள்ளார்கள் என்று. குழந்தைகளிடம் இருக்கும்போது அவர்களால் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவிட முடியும் அத்தனை சக்தி அவர்களிடம் உள்ளது. ஆனால் செந்தில் அண்ணா, அசோக் எல்லாம் இரண்டு மூன்று முறை சரியாக அடித்தது சற்று மகிழ்ச்சியாய் இருந்தது.
கடல் விளையாட்டில் ஸ்டாலின் |
கடல் விளையாட்டில் குமார், தனசேகர், இசை |
அடிச்சிடேன் என்று சொல்ல…
“நீ கிழிச்ச”...
என்று ஒருவனிடம் இருந்து பதில் வந்தது. என்னடா இவ்வளவு பெருந்தன்மையாக இருக்கிறார்களே என்று அப்போதுதான் தெரிந்தது. விளையாட்டு நுணுக்கம் தெரிந்தவர்கள் பின்னாலும் ஒன்னும் தெரியாத சின்ன பசங்களான எங்களை அவர்கள் முதலிலும் வரிசைபடுத்தியுள்ளார்கள் என்று. குழந்தைகளிடம் இருக்கும்போது அவர்களால் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவிட முடியும் அத்தனை சக்தி அவர்களிடம் உள்ளது. ஆனால் செந்தில் அண்ணா, அசோக் எல்லாம் இரண்டு மூன்று முறை சரியாக அடித்தது சற்று மகிழ்ச்சியாய் இருந்தது.
இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கும் பொழுது நிலாவும் வந்தாகிவிட்டது. நிலா வந்தவுடன் அந்த இடமே வேறொரு தளத்திற்கு சென்றுவிட்டது. பின்னர் அனைவரும் வார வாரம் நடக்கும் சிலம்பு பயிற்ச்சிக்கு சென்றுவிட்டனர். சோபனா சிலம்பத்திற்கு புதியவர்களான எங்களுக்கு அடிப்படை பயிற்ச்சியினை கற்றுகொடுத்தாள். மற்ற குழந்தைகளுக்கு ஈரோட்டில் இயங்கிகொண்டிருக்கும் கலைத்தாய் அறக்கட்டளையில் இருக்கும் தனசேகர் பயிற்சிகொடுத்தார். பின்னர் என்னையும், ஸ்டாலினையும் தவிர அனைவரும் “கடல்” விளையாட்டில் மும்மராமாகிவிட்டனர். மாடு பார்க்க சென்ற குழுவும் இதில் சேர்ந்துகொண்டது. முத்து, சிவராஜ் , ஸ்டாலின் அவர்களுடன் நானும் நூலகம் சுற்றியுள்ள நெகிழி குப்பைகளை அகற்றும் மற்றும் நாற்று பன்னைக்கு தேவையான தண்ணீரை கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுவிட்டோம். ஸ்டாலினும் இடையில் காணவில்லை, பார்த்தால் கடல் விளையாட்டில் பிரதானமாக ஓடிக்கொண்டிருந்தார்.
ஏழுகல்லு விளையாட்டில் கடைசி தருணம் |
ஏழுகல்லு விளையாட்டில் பார்வையாளர்களுடன் போட்டியாளர்கள் |
கடல் விளையாட்டு முடிந்தவுடன் , ஏழுகல் (seven stone or seven shot) விளையாட்டினை அனைவரும் இரண்டு குழுக்கலாக பிரிந்து விளையாடினோம். இந்த விளையாட்டுகள் எல்லாம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டிருக்கிறது ”அறம் குமார்” அவர்களால்.கூச்சலும் கும்மாளமாய் மண்ணில் புழுதிகள் பறக்க வயதுவித்தியாசமில்லமல் அனைவரும் குதூகலத்துடன் விளையாடினோம். சிவராஜ் அண்ணா ரமேஷ் என்ற புதிய நண்பரை அறிமுகபடுத்தினார். நடைபாதையில் போகிறவர்கலெல்லாம் எங்களை ஏக்கத்துடனே பார்து பெருமூச்சு விட்டுகொண்டு ஏதோ ஒரு தடையினை மனதில் வைத்துகொண்டே சென்றனர். நேரம் போனதே தெரியவில்லை, யாருக்கும் பசி என்ற உணர்வே எழவில்லை. மனது அந்த அளவிற்கு அனைவருக்கும் ஆனந்தகூத்தாடியிருக்கிறது. எல்லோரும் களைப்படந்த நிலையில் சிறிதுநேரம் “எறிபந்து” விளையாடினோம் அது மேலும் களைப்படைய செய்தது. களைப்புபோக எல்லோரும் சிறிது நேரம் நூலகத்திற்கு சென்று ஓய்வெடுத்தோம். நூலகத்திறுகு செல்லும் முன் பவதாரணி “நிலா நிலா ஓடிவா என்ற புதிய மற்றும் பச்சைகிளி” என்ற பாட்டினை முத்துபற்கள் தெரிய அனைவருக்கும் பாடிகாட்டினாள்.
பவதாரணி |
நடிகர்கள் |
ஓய்வெடுத்தபிறகு குமார் குழந்தைகளிடம் நாடகம் நடிக்கலாம் என்று கேட்டதற்கு அனைத்து குழந்தைகளும் ஒருசேர நடிக்கலாம் என்று கும்பலாக முழங்கினர். பின்னர் விதிமுறைகளை குமார் சொல்ல ஆரம்பித்தார். நான்கு குழுக்களாக பிடித்தவர்களுடன் சரிசமமாக பிரிந்துவிடவேண்டும், சுற்றுச்சூழல் சம்பந்தமாக கதை இருக்க வேண்டும், கதையின் கதா பாத்திரங்களை நீங்களே (குழந்தைகளே) வரைந்து தயார் செய்யவேண்டும் (தோற்பாவை கூத்து பொம்மைகள்போல காகித்தத்தில்), தயார் செய்த கதாபாத்திரங்களை ஒவ்வொரு கதாபாத்திரங்களாக குழுக்களில் உள்ள ஒவ்வொருவரும் தங்களாக எண்ணி கூத்து காண்பிக்க வேண்டும்.
சொன்ன அடுத்த கணத்தில் இருந்து அனைத்து குழந்தைகளும் கலத்தில் குதித்துவிட்டனர்.
அண்ணா பென்சில், கத்தரி, ரப்பர் …..
அவன் அந்த டீமில் சேந்துட்டான்….
இவள் அங்கிருந்து இங்கு வந்துட்டாள்….
இவள் சொன்னாவே கேட்க மாட்டீங்குறா…
அண்ணா இவங்ககிட்ட ரண்டு கத்திரி இருக்கு…..
என்று ஒரே கூச்சல்தான். கூச்சல், கும்மாளம், கத்துவது, ஆடுவது, குதிப்பதெற்கெல்லாம் இங்கு மட்டும்தான் இவர்களுக்கு தடையில்லை என்று நினைக்கிறேன்.
கதைகளுக்குள் செல்ல தயாராக இருக்கும் பாவைகள் |
நேற்று நிலாவிற்கு கொடுப்பதற்காக செய்து வைத்த காகித பறவையை நிலாவிடம் காட்ட… அங்கிருந்த கதிர், அண்ணா எனக்கு எப்படி செய்வது என்று சொல்லிகொடுங்கள் என்றவுடன் ஆனந்தமாக ஆரம்பித்தேன் பகிர்தலை. என்றோ ஒரு நாள் அலுவலகதில் மதியம் ஓய்வாக இருக்கும்பொழுது இணையத்தின் மூலமாக கற்றுகொண்டது, அதுவும் குறிப்பாக ஒரு பறவைமட்டுமே செய்ய கற்றுகொண்டது இன்று பயன்படுகிறது.
மிகச்சிறுவயதில் விடுமுறைக்கு அத்தைவீட்டிற்கு சேலம் செல்லும்போதெல்லாம் பக்கத்துவீட்டில் உள்ள தாத்தா (வீடு படத்தில் வரும் தாத்தா போல் இருப்பார்) பழைய லாட்டரி டிக்கட்டில் பெண் பொம்மைகள் வரிசையாக கைகோர்து இருப்பதுபோல கத்தரித்து அதை வீட்டின் வெளியே அலங்கார விளக்கும் இருக்கும் இடத்தில் வைத்து அதன் மேல் ஒரு கல்லையும் தினமும் வைத்துவிட்டு சென்றுவிடுவார். ஏகதேசம் தெருவில் குழந்தைகள் இருக்கும் எல்லா வீட்டிலும் அன்றைய பொம்மைகள் இருக்கும்.
ஒவ்வொருநாளும் ஒவ்வொருவடிவம் இருக்கும். இவராலேயே இந்த காகிதத்தில் உருவம் கற்றுகொள்ள ஆசையிருந்தது. அது அன்று முழுமை பெற்றுவிட்டது, காரணம் நான்கற்றதை மற்றவர்களும் கற்றுவிட்டார்கள் அதுவும் குழந்தைகளுக்கு கற்றுகொடுத்துவிட்டேன் என்பதில் எனக்கு மிகப்பெரிய ஆனந்தம். நான் மட்டுமில்லை குமார் சதுரவடிவ குப்பை தொட்டியும், வெங்கட் அண்ணா நீளபடகினையும், தமிழ்… பேசும் பொம்மையினையும், அசோக் காகித பந்தினையும் செய்து காண்பித்தார்கள். அன்று தோன்றியது இன்னும் நிறைய வடிவங்களை கற்றுகொண்டு குழந்தைகளிடத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று.
அனுபவ பகிர்வில் சோபனா |
அனுபவ பகிர்வில் தமிழ் |
அனுபவ பகிர்வில் செளந்தரியா |
அனுபவ பகிர்வில் ஸ்ரீநாத் |
இவை ஒருபுறமிக்க, மற்றொருபுறம் குழந்தைகள் குமாரின் உதவியுடன் தான் நடிக்கபோகும் கதாபாத்திரதை தாங்களே உருவாக்கி ஒத்திகை பார்ப்பதில் படுதீவிரமாக இருந்தனர். நாடகம் தொடங்குவதற்கு முன்னர் நூலகத்தில் பிரபுவின் அம்மா செய்து கொண்டுவந்திருந்த புளிசாதம் சுண்டல் சிலருக்கும், சிலருக்கு கயித்த மலை கோவிலிலும் மதிய உணவு கிடைத்தது. கண்ணன் அவரது மனைவி மற்றும் மகள் மகிழ்மலர் முகநூலில் பார்துவிட்டு கோவையில் இருந்து முகாமினை காண்பதற்காக வந்தோம் என்ற அறிமுகபடுத்திகொண்டுடனர். ஸ்டாலின் கண்ணன் அண்ணா குடுபத்திற்கு குக்கூ மற்றும் அதன் செயல்பாடுகளை விவரித்துகொண்டிருந்தார். முத்து, அஸ்வினி, குமார், பாலா மற்றும் இசை கூத்திற்கு தேவையான திரையை வேட்டிகொண்டு தயார் செய்துகொண்டே மற்ற ஆயத்தவேலையில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சற்றுமுன் விஸ்வாவின் அப்பா அவர்கள் வீட்டில் உறவினர் அவனை காண்பதற்காகவே வந்ததாக சொல்லி அவனை அழைத்து செல்ல வந்துவிட்டார். அவனுக்கு மனதே இல்லை. நாங்கள் அவரிடம் நடந்தவைகளை எடுத்துகூறி அவனது நாடகத்தை முதலிலே வைக்கிறோம் முடிந்தவுடன் கூட்டி செல்லுங்கள் என்று உறுதியளித்தோம்.
நூலக சிறிதுநேரம் நாடக அரங்காக மாறுவதற்கு தயாரானது. சன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்டு அருகில் இருப்பவர்களின் முகம் சற்றே மங்களாக தெரியுமளவிற்கு இருட்டானது. அஸ்வினியும் நவீனும் கம்பால் கட்டப்பட்ட திரையினை இருபக்கமும் இருந்து பிடித்துகொண்டனர். பாலாவும் அசோக்கும் திரைக்கு பின்னால் இருந்து குழந்தைகள் உட்காருவதற்கு இடத்தை விட்டுவிட்டு அங்கு இருந்த LED விளக்கினை பிடித்துகொண்டு காகிதத்தில் வெட்டப்பட்ட உருவங்களின் நிழல் திரையில் தெரிவதற்கு ஏதுவாக நின்றனர். குமார் சிறிது துணுக்குகளை கொடுத்தபிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது.
நான்கு நாடகங்களும் மரம் வெட்டுதலின் விளைவையும், மழையின் அவசியத்தையும், இயற்கையின் அழகையும் வலியுறுத்தியே இருந்தது. அதில் ஒரு நாடகத்தில் விலங்குகளே காடுகளை வளர்க்க விதையினை நடுவதுபோலவும், மற்றொன்றில் மரத்தினை வைத்தே தோற்றத்தில் ஒன்றும் அழகில்லை எண்ணத்தில்தான் அழகு இருக்கிறது என்று தான் உருவாக்கிய பொம்மைகளை வைத்தே தாங்களே நடித்தனர். விஸ்வாவின் கூத்து முடிந்தவுடன் அப்பா அவனை அழைக்க “வேண்டும் என்றால் அத்தையை ஆறு மணிக்குமேல் அவர்களை போகசொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு அடுத்த பொம்மையில்லாமல் நடிக்கும் பிரபுவின் குழுக்குள் சென்றுவிட்டான். பெண் குழந்தை, சாதியம், மரம் அழிப்பு போன்றவற்றை பத்து நிமிடத்தில் புரியவைத்துவிட்டார்கள்.
இரு நாடகங்கள் மறுமுறை அரங்கேற்றப்பட்டது. நாடகம் முடிந்தவுடன் புதிய நண்பர்களுக்கு புத்தகங்கள கொடுக்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் தங்களின் இந்த மற்றும் முன் வருட கோடைகால முகாமின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விஸ்வாவின் அப்பாவும் முழு நிகழ்ச்சியையும் ரசித்து அனுபவத்திவிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். மற்ற முழந்தைகளும் நாங்களும் இடுகாட்டிற்கு எதிர்புறமுள்ள பழையகால கிணற்றில் இருக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு நூலகத்திற்கு திரும்பி வரும்பொழுது அழகேஸ்வரி, கௌதமி அக்காக்கள் அப்பொழுதுதான் வந்தனர். உடல்நிலை சரியில்லாததால் இருவராலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று வருந்தினர்.
நிலவும் மலரும் சந்தித்த தருணம் |
காகிதப் பாவை கூத்து பார்வையாளர்கள் - பாலா |
காகிதப் பாவை கூத்து பார்வையாளர்கள் - மகிழ்மலர் குடும்பத்தினர், அஸ்வினி, சந்தியா |
காகிதப் பாவை கூத்து பார்வையாளர்கள் - ரமேஷ் |
பழங்கால கிணறு தூர்வாருதல் - குழந்தைகளுடன் நவீன் |
பழங்கால கிணறு தூர்வாருதல் - குழந்தைகளுடன் வெங்கட் அண்ணா |
பொறிகடலை கொறித்தல் நிலாவுடன் அழகேஸ்வரி மற்றும் கௌதமி அக்காக்கள் |
கொண்டாட்டம் |
நிலவு உதிக்கும் சற்று நேரத்திற்கு முன் அந்த மெல் ஒளியில் அனைவரும் கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். யாருக்கும் மலையை விட்டு இறங்குவதற்கு விருப்பமே இல்லை. காலத்தின் கட்டாயத்தால் எறும்புபோல ஊறுவதற்கு தயாரானோம். அனைவரின் முகமும் சற்று கணக்க அரம்பித்ததுபோல இருந்தது. ஆனால் வெகு நேரம் நீடிக்கவில்லை. மலையடிவாரத்தில் ஒருவீட்டில் நாய்குட்டி கட்டியிருந்ததை கண்ட நிலா மான்குட்டியாக குதித்தோடினாள். பூர்வஜென்ம பந்தம் போல நிலாவிடம் அந்த குட்டி அவ்வளவு இணக்கமாக ஒட்டிக்கொண்டது. நிலாவின் முகத்தில் அத்தனை பூரிப்பு, மகிழ்ச்சி. அவளாக ஜீலி… ரோஸி… பப்பி…. என்ற பெயர்களை சூட்டிகொண்டிருந்தாள்.
நாங்கள் வசிக்கும் வீட்டுகுடியிருப்பு பகுதியில் நாய்கள் வளர்க்க அனுபதியில்லை என்று நிலாவின் பெற்றோர்கள் வருத்தப்பட்டனர். பப்பியை விட்டு பிரிந்தவுடன் நாய் சார்ந்த கதைகளை சற்று துள்ளல் குறைவாக சொல்ல ஆரம்பித்தாள் அவளுக்கே உரிய பாணியில். பப்பிக்கு கண்ணீர் மட்டும்தான் வரவில்லை, நிலாவை பிரிந்தவுடன் தன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட அந்த தருணம் வந்துபோயிருக்கும்.
நிலா - பப்பி - திலகவதி |
ஒரு வழியாக நூலகத்தை அடைந்தபிறகு முதலில் நிலாவின் குடும்பம் பெங்களூர் நோக்கி பயணிக்க பின் பாலாவும் விடைபெற்றுகொண்டார். மிதமுள்ளவர்கள் அருகில் இருக்கும் ஹோட்டல் காயத்ரிக்கு சென்று இரவு உணவினை முடித்தபின் குமார், அஸ்வினி, அசோக், இசை என நான்கு பேரையும் சென்னைக்கு வழியனுப்பி வைத்துவிட்டு நானும் அடுத்தநாள் விடியபோகும் நகர வாழ்க்கைக்கு என்னை மனதளவில் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். கூட்டமாக இருந்துவிட்டு ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராக பிரிந்து போன பிறகு ஆழ்ந்த அமைதி மட்டுமே அந்த இடத்தை நிரப்பியிருக்கும். அந்த அமைதியை உணர்ந்திருந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். சிறிதுநேரம் கழித்து நானும் அமைதியை விட்டு விட்டு சேலம் போகும் பேருந்தில் ஏறிக்கொண்டேன்.
பயண சீட்டு எடுத்துவிட்டு…
இருக்கையில் அமர்ந்து கொண்டு…
கண்களை மூட…
மூடிய விழிகளின் திரையில்…
அன்றை காட்சிகள்…
மீண்டும் சுழல ஆரம்பிக்க…
பேருந்தும் காற்றின் வேகத்தில் கைகோர்த்துகொண்டது.
உங்களோடு ஒருசேர பயணித்த பரவசம்.
ReplyDelete